புதன், 14 செப்டம்பர், 2011

ஸ்வாமியே சரணம்



அரிகர புத்திரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரி கிரீசனை சாந்த சொரரூபனை
தினம் தினம் போற்றி பணிந்திடு வோமே

ஐயப்ப தேவன் கவசமிதனை
அனுதினம் சொல்ல அல்லகள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக

புலிவாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திடுட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணிய மூர்த்தியே வருக வருக

பூத நாயகா வருக வருக
புஸ்களைபதியே வருக வருக
பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக

வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீரமணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவினை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனதில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே

சபரிகிரீசனை நினைந்தே நீறிட
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர் களெல்லாம் பணிந்தே வணங்குவார்
ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க
அவனியிலுள்ளோர் அடிபணிந்தேத்துவர்

சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பி கண்ணினைக் காக்க
நாரணன் பாலன்நாசியைக் காக்க

இருமூர்த்தி மைந்தன் இன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முக பூஜ்யன் நாவினைக் காக்க

கலியு வரதன் என் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க
புஸ்கள நாதன் புஜங்களை காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க

வீரமணிகண்டன் விரல்களைக் காக்க
மணிகண்டன் தேவன் மார்பினைக் காக்க
கயிலை மைந்தன் கைகளை காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க

முழுமுதற் கடவுள் என் முதுகினை காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள் பாலன் பாதத்தினைக் காக்க
விஜய குமாரன் விரல்களைக் காக்க

அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டளரூபி காலையில் காக்க
நவக்ரநாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
அரிகர சுதனார் அந்தியில் காக்க
இன்மயஜோதி இரவினில் காக்க
எரிமேலி சாஸ்த என்றுமே காக்க

அரியின் மகனார் அனுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடிஈசன் இடப்புறம் காக்க

காக்க காக்க கருணையால் காக்க
பார்க்க பார்க்க என் பாவம் பொடிபட
இம்மையிம் மறுமையும் இல்லாதொழிந்திட
ஈசன் மகன் எனை என்றுமே காக்க

கொடிய விலங்குகளும் கொள்ளை நோய்களும்
குருதியை குடிக்கும் துஸ்டப் பேய்களும்
காந்தமலை தனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திட கருனை புரிவாய்

பில்லி சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய் ப|றக்க வரமெனக் கருள்வாய்
பயங்களை போக்கி அபயம் அளிப்பாய்

வாதம் பித்தம் சிலேட்சுமத்துடனே
வாந்தியும் பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எரிமேலி தேவா

கல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனதுடனே உனை நான் துதிக்க
நித்தமும் அளுள்வாய் சபரிகிரீசா

காமம் குரோதம் லோபம் மோகம்
மதமச் சர்யமெனும் ஐம்பெரும் பேய்களும்
என்றுமே என்னை அணுகி விடாமல்
ஐயப்ப தேவா வரமெனுக் கருள்வாய்

மூப்பும் பிணியும் வ|றுமையும் பசியும்
வந்தெனை வாட்டி வதைசெயாமல்
உள்ளன் புடனே உந்திரு நாமம்
அனுதினம் சொல்ல அருள் தருவாயே

அரிகர புத்ரா அன்பா நமோ நம
சபரிகிரீசா சாஸ்தா நமோ நம
பதினென் படிவாழ் பரமா நமோ நம
ஐங்கரன் சோதரா ஐயப்பா நமோ நம

பொன்னம் பலத்துறை புண்யா நமோ நம
புலிப்பால் ஈந்த புண்யா நமோ நம
கரிகா யுதமுடைச் சுந்ரா நமோ நம
மகிஸி மர்த்தனா மணிகண்டா நமோ நம

சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

==================================================================

ஓம்         கன்னிமூல கணபதி பகவானே       சரணம் ஐயப்பா
ஓம்         காந்தமலை ஜோதியே                 சரணம் ஐயப்பா
ஓம்         அரிகர சுதனே                          சரணம் ஐயப்பா
ஓம்         அன்னதான பிரபுவே                   சரணம் ஐயப்பா
ஓம்         ஆறுமுகன் சோதரனே                சரணம் ஐயப்பா
ஓம்         ஆபத்தில் காப்போனே                சரணம் ஐயப்பா
ஓம்         இன்தமிழ் சுவையே                    சரணம் ஐயப்பா
ஓம்         இச்சை தவிப்பவனே                  சரணம் ஐயப்பா
ஓம்         ஈசனின் திருமனே                     சரணம் ஐயப்பா
ஓம்         ஈடில்லாத் தெய்வமே                 சரணம் ஐயப்பா
ஓம்         உண்மைப் பரம் பொருளே            சரணம் ஐயப்பா

ஓம்         உலகாளும் காவலனே                சரணம் ஐயப்பா
ஓம்         ஊமைக்கருள் புரிந்தவனே           சரணம் ஐயப்பா
ஓம்         ஊழ்வினை அழிப்பவனே             சரணம் ஐயப்பா
ஓம்         எளியோர்க்கு அருள்பவனே          சரணம் ஐயப்பா
ஓம்         எங்கள் குலதெய்வமே                சரணம் ஐயப்பா
ஓம்         ஏழைப்பங்காளனே                    சரணம் ஐயப்பா
ஓம்         ஏகாந்த மூர்த்தியே                    சரணம் ஐயப்பா
ஓம்         ஐங்கரன் தம்பியே                     சரணம் ஐயப்பா
ஓம்         ஒப்பில்லாத் திருமேனியே            சரணம் ஐயப்பா
ஓம்         ஒளிரும் திருவிளக்கே                சரணம் ஐயப்பா
ஓம்         ஓங்காரப் பரம்பொருளே              சரணம் ஐயப்பா
ஓம்         ஓதும் மறைப்பொருளே               சரணம் ஐயப்பா

ஓம்         ஒளடதங்கள் அருள்பவனே           சரணம் ஐயப்பா
ஓம்         சௌபாக்கியம் அளிப்பவனே         சரணம் ஐயப்பா
ஓம்         கலியுக வரதனே                       சரணம் ஐயப்பா  
ஓம்         சபரிமலை சாஸ்தாவே                சரணம் ஐயப்பா
ஓம்         சிவன்மால் திருமகனே                சரணம் ஐயப்பா
ஓம்         சிவவைணவ ஐக்கியமே              சரணம் ஐயப்பா
ஓம்         அச்சங்கோவில் அரசே                சரணம் ஐயப்பா
ஓம்         ஆரியங்காவு ஐயாவே                 சரணம் ஐயப்பா
ஓம்         குளத்துப் புழைப் பாவலனே          சரணம் ஐயப்பா
ஓம்         பொன்னம்பல வாசனே                சரணம் ஐயப்பா
ஓம்         வில்லாளி வீரனே                  சரணம் ஐயப்பா
ஓம்         வீரமணி  கண்டனே                  சரணம் ஐயப்பா
ஓம்         உத்திரத்தில் உதித்தவனே            சரணம் ஐயப்பா

ஓம்         உத்தமனே சத்தியனே                  சரணம் ஐயப்பா
ஓம்         பம்பையிலே பிறந்தவனே             சரணம் ஐயப்பா
ஓம்         பந்தள மாமணியே                     சரணம் ஐயப்பா
ஓம்         சகலகலை வல்லோனே               சரணம் ஐயப்பா
ஓம்         சாந்தநிறை மெய்ப்பொருளே          சரணம் ஐயப்பா
ஓம்         குருமகனின் குறைதீர்த்தவனே       சரணம் ஐயப்பா
ஓம்         குருதட்சணை அளித்தவனே          சரணம் ஐயப்பா
ஓம்         புலிப்பாலைக் கொணர்ந்தவனே      சரணம் ஐயப்பா
ஓம்         வன்புலியின் வகனனே                சரணம் ஐயப்பா
ஓம்         தாயின் நோய் தீர்த்தவனே            சரணம் ஐயப்பா
ஓம்         குருவின் குருவே                      சரணம் ஐயப்பா
ஓம்         வாபரின் தோழனே                    சரணம் ஐயப்பா
ஓம்         துளசிமணி மார்பனே                  சரணம் ஐயப்பா
ஓம்         தூயவுள்ளம் அளிப்பவனே            சரணம் ஐயப்பா
ஓம்         இருமுடிப்பிரியனே                     சரணம் ஐயப்பா
ஓம்         எருமேலி சாஸ்தாவே                  சரணம் ஐயப்பா
ஓம்         நித்திய பிரம்மச் சாரியே               சரணம் ஐயப்பா
ஓம்         நீலவஸ்திர தாரியே                    சரணம் ஐயப்பா
ஓம்         பேட்டை துள்ளும் பேரருளே           சரணம் ஐயப்பா
ஓம்         பெரும் ஆணவத்தை அழிப்பவனே    சரணம் யஐப்பா
ஓம்         சாஸ்தாவின் நந்தவனமே              சரணம் ஐயப்பா
ஓம்         சந்திதரும் பேரழகே                    சரணம் ஐயப்பா
ஓம்         பேருத்தோடு தரிசனமே                சரணம் ஐயப்பா
ஓம்         பேதமையை ஒழிப்பவனே             சரணம் ஐயப்பா
ஓம்         காளைகட்டி நிலையமே                சரணம் ஐயப்பா
ஓம்         அதிர்வேட்டுப் பிரியனே                சரணம் ஐயப்பா
ஓம்         அழுதமலை ஏற்றமே                   சரணம் ஐயப்பா
ஓம்         ஆனந்தமிகு பஜனைப் பிரியனே       சரணம் ஐயப்பா
ஓம்         கல்லிடும் குன்றே                      சரணம் ஐயப்பா
ஓம்         உடும்ப்பாறைக் கோட்டையே          சரணம் ஐயப்பா
ஓம்         இஞ்சிப் பாறைக் கோட்டையே        சரணம் ஐப்பா
ஓம்         கரியிலந் தோடே                       சரணம் ஐயப்பா
ஓம்         கரிமலை ஏற்றமே                      சரணம் ஐயப்பா
ஓம்         கரிமலை இறக்கமே                    சரணம் ஐயப்பா
ஓம்         பெரியானை வட்டமே                   சரணம் ஐயப்பா
ஓம்         சிறியானை வட்டமே                    சரணம் ஐயப்பா
ஓம்         பம்பா நதி தீர்தமே                      சரணம் ஐயப்பா
ஓம்         பாவமெல்லாம் அழிப்பவனே          சரணம் ஐயப்பா
ஓம்         திருவேணிச் சங்கமமே                சரணம் ஐயப்பா
ஓம்         ஸ்ரி இராமர் பாதமே                   சரணம் ஐயப்பா
ஓம்         சக்தி பூஜைக் கொண்டவனே          சரணம் ஐயப்பா
ஓம்         சபரிக் கருள் செய்தவனே              சரணம் ஐயப்பா

ஓம்         தீப ஜோதித் திரு ஒளியே              சரணம் ஐயப்பா
ஓம்         தீராத நோய்  தீர்பவனே                சரணம் ஐயப்பா
ஓம்         பம்பா விளக்கே                         சரணம் ஐயப்பா
ஓம்         பழவினைகள் ஒழிப்பவனே            சரணம் ஐயப்பா
ஓம்         தென்புலத்தார் வழிபாடே              சரணம் ஐயப்பா
ஓம்         திருபம்பையின் புண்ணீயமே           சரணம் ஐயப்பா
ஓம்         நீலிமலை ஏற்றமே                     சரணம் ஐயப்பா
ஓம்         நிறைவுள்ளம் தருபவனே              சரணம் ஐயப்பா
ஓம்         அப்பாசி மேடே                          சரணம் ஐயப்பா
ஓம்         இப்பாசிக் குழியே                       சரணம் ஐயப்பா
ஓம்         சபரி பீடமே                              சரணம் ஐயப்பா
ஓம்         சரங்குத்தி ஆலே                        சரணம் ஐயப்பா
ஓம்         உரல்குழி தீர்த்தமே                     சரணம் ஐயப்பா
ஓம்         கருப்பண்ண சாமியே                   சரணம் ஐயப்பா
ஓம்         கடுத்த சாமியே                          சரணம் ஐயப்பா
ஓம்         பதின்னெட்டாம் படியே                 சரணம் ஐயப்பா
ஓம்         பகவானின் சன்னிதியே                 சரணம் ஐயப்பா
ஓம்         பரவசப் பேருணர்வே                    சரணம் ஐயப்பா
ஓம்         பசுவின் நெய் அபிஸேகமே             சரணம் ஐயப்பா
ஓம்         கற்பூரப் பிரியனே                        சரணம் ஐயப்பா
ஓம்         நாகராசப் பிரபுவே                       சரணம் ஐயப்பா
ஓம்         மாளிகைப் புறத்தம்மனே               சரணம் ஐயப்பா
ஓம்         மஞ்சமாதா திருவருளே                 சரணம் ஐயப்பா
ஓம்         அக்கினிக் குண்டமே                     சரணம் ஐயப்பா
ஓம்         அலங்காரப் பிரியனே                    சரணம் ஐயப்பா
ஓம்         பஸ்மக் குளமே                          சரணம் ஐயப்பா
ஓம்         சற்குரு நாதனே                          சரணம் ஐயப்பா
ஓம்         மகர ஜோதியே                           சரணம் ஐயப்பா
ஓம்         மங்கள மூர்த்தியே                       சரணம் ஐயப்பா







ஞாயிறு, 26 ஜூன், 2011

arihara puththiran

arihara

ஞாயிறு, 15 மே, 2011

thiruvaasakam

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
5
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
6
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்

வியாழன், 15 ஜூலை, 2010

விநாயகர் கவசம் - kanapathi kavasam

விநாயகர் கவசம்

அழைத்தோர்க்கோர் இன்பமுண்டாம் ஆற்றலுண்டாம்
உள்ளில் இழைத்தார்கோ அன்புடனே இன்பம்
விழைந்தேறும் சித்தியும் சேர்ந்திடும்
ஸ்சிரி கணநாதனின் சக்தி கவசத்தினால்

சூழுமிடர்தீர சுளி போட்டு நெஞ்சே நீ
வேழுனடி நோக்கே விரை

கருணை பொங்கும் கற்பக நிதியே
காலம் எல்லாம் ஆளும் கதியே
உருவ விந்தையே உலகின் ஆதியே
ஒய்யார வடிவாய் அசையும் அழகே
ஓங்காரமாம் பிரணவ எழுத்தின்
உயரிய வடிவம் கொண்டு விளங்கும்
சிங்காரமே சிவனார் மகனே
சைவ அறத்தின் தெள்ளிய பொருளே
கணங்கள் சூழ்ந்திட அமர்ந்திடும் பதியே
கரிமாமுகனே ஸ்ரி கணநாதா
துணையாய் என்|றும் எம்மை எங்கும்
சூழ்ந்து காத்திடும் தும்பிக்கையானே
பார்வதி தேவியின் செல்லப் பிள்ளையே
பாரினைக் காக்கும் பரிவுப் பிள்ளையே
தீர்வுகளாய் பல புதிர்களின் விடையை
தெளிவாய் அருளும் ஞானச் செ|றிவே

தத்துவ வடிவம் மொத்தமும் காட்டும்
தன்னிகர் இல்லாத் தனிப் பெரும் இறையே
சித்துகளாய் பல லீலைகள் செய்யும்
தீரா வினைகள் தீர்க்கும் மறையே
ஆனை முகத்துப் பிள்ளாய் வருக
ஆடி ஆடி அசைந்தே வருக
தேனை வைத்தோம் முன்னே வருக
தெய்வக் களிறே இங்கே வருக
காக்கை வடிவாய் யாக்கை கொண்டு
காவிரி கவிழ்த்த கடலே வருக
தூக்கும் துதிக்கை தூக்கி அணைக்கும்
தோகை மயிலோன் முன்னோன் வருக
விகட ரூபனே வருக வருக
விஸ்வ ரூபனே வருக வருக
சகடமாக முகாலமும் உருட்டும்
சக்தி நாதனே வருக வருக

சித்தியின் புத்தியுன் சிந்தை நிறைந்து
செவ்விய கோலம் தந்திடும் நாதா
புத்தியில் சித்தியை தந்திடும் பரமே
பூரணம் ஆகிய புனிதா வருக
கார் நிறத் தேகக் கரிமா முகனே
கனிவுடன் வருக கனிவுடன் வருக
வேல் வீரம் ஏறிய ஸ்வேத நாயகா
வெள்ளெருக்கோனே வருக வருக
வருக வருக கணநாதா வருக
வருக வருக கணங்கள் சுழ்ந்தே
வருக வருக மூஸிக வாகன
வருக வருக மோதகப் பிரியனே
எட்டுத் திசைகளும் சுற்றிப் பணிந்திட
ஏக தந்தனே இங்கே வருக
விட்டு விடாமல் கை கொடுத்திடவே
விக்ன விநாயக விரைவாய் வருக
தகுதகு திந்திமி தத்தாளங்கு திமி
ஜதிகள் போட்டு சடுதியில் வருக
அகமும் புறமும் குளிரும் வண்ணம்
ஆடிய பாதனே அசைந்து வருக
கங்கம் என்னும் மந்திர பீஜம்
காற்றில் ஒலிக்க வருக வருக
கிலீம் க்லௌம் என்னும் அட்சரம் ஒலிக்க
கிரீட கணாதிப வருக வருக

சிவகைலாய செல்வா நீயும்
சீக்கிரமாக வருக வருக
கவலை யாவும் போக்கிட ஜயா
கடுகியே வருக கடுகியே வருக
அழகிய வடிவாய் அமரும் அழகும்
அன்பு நிரம்பிய பார்வை அழகும்
பழகிய முகத்தில் பரவிய அழகும்
பார்க்க பார்க்க தூண்டும் அழகும்
கடினம் கொண்டு கவினுடன் விளங்கும்
கரிய நிறத்து மத்தக அழகும்
முடியும் மணிமுடி முத்தும் பொன்னும்
மொத்தம் இழைந்திட ஒளிரும் அழகும்
பாலச் சந்திரனை பாதி எடுத்து
பக்குவமாக தரித்த அழகும்
மேலும் கீழும் சொல்வதைக் கேட்டு
விரைவாய் ஆட்டும் தலையின் அழகும்

யானைத் தலையை ஏந்திக் கொண்டு
எழிலாய்க் கோலம் கொள்ளும் அழகும்
ஞானம் அளிக்கும் நெற்றியின் அழகும்
நெற்றிப் பரப்பில் நீற்றின் அழகும்
வெண்மதி சூரியன் தீயென மூன்றே
இழையின் வடிவில் காட்டும் அழகும்
தன்னடியாரவர் வேண்டுதல் கேட்டு
சாமரமாகிடும் செவியின் அழகும்
சிறுவிழியாலே சிரித்திடும் அழகும்
செவிகளின் மணியை அசைத்திடும் அழகும்
அருகினில் வாவென அழைத்திடும் வண்ணம்
அழகுத் துதிக்கையை ஆட்டிடும் அழகும்
வலம்புரி இடம்புரி என்னும் வகைபடி
வளைவுகள் கொண்ட துதிக்கை அழகும்
நலம் பல தந்திட நயம் பல தந்திட
நான்காய் அமைந்த திருக்கை அழகும்

மகாபாரதம் எழுதிட வேண்டி
வண்ணத் தந்தம் ஒன்றை உடைத்து
மகா காவியம் எழுதியதாலே
ஒற்றைத் தந்தமுடன் விளங்கும் அழகும்
இணையாய் தோள்கள் இரண்டின் அழகும்
இணையில்லாத் தோள் வளையின் அழகும்
கணங்கள் தோறும் வரங்கள் தந்து
கமலம் போலச் சிவந்த கரங்களும்
பாசம் அங்குசம் தாங்கிய கரத்துடன்
பாசம் காட்டிடத் துடிக்கும் அழகும்
பூசிய சந்தணம் மணந்திடச் சுடரும்
பொலிவுடன் தோன்|றும் மணியணி மார்பும்

அண்டம் அனைத்தும் உண்டு வளர்த்து
அழகாய்ச் சரிந்த தொந்தியின் அழகும்
வண்ண இடையினில் அரவம் தன்னை
வகையாச் சூடிய கச்சையின் அழகும்
இருதிரு வடியும் இணைமுழந் தாளும்
இசையத் தோன்றி விளங்கும் அழகும்
திருவருள் ஏந்தி தாமரை போல
திகழ்திடும் பாதம் இரண்டின் அழகும்
விலங்கின் தோ|ற்றம் கொண்டு விளங்கும்
வேழனின் யானைத் தலையின் அழகும்
குலவும் முகமும் விழியும் கொண்டு
குலவும் மானிட உருவின் அழகும்
குட்டைக் காலும் பானை வயிறும்
கொண்டு விளங்கும் பூத அழகும்
நான்கு கரத்து தேவரின் அழகும்

நர்த்தனம் ஆடிடும் போது ஒலிக்கும்
நாதச் சதங்கை கூடிய அழகும்
மெத்த நடக்கையில் மேனியிலாடும்
மணிகளிரண்டின் எதிரொலி யழகும்
கண்ணில் காண பரவசம் ஏறும்
கருத்தில் ஏற்றால் ஆனந்தம் ஊறும்
எண்ணில்லாத கோயில் கொண்டு
எங்கும் உறையும் ஏக தந்தனே
உன்னைக் கண்டு உரைத்தால் போதும்
உடனே வருவாய் என்பது தெரியும்
என்றும் உன்னை நினைவில் ஏற்றோம்
எங்கைளைக் காக்க எப்போதும் வருக
காக்க காக்க உன்னைங் கரமே
காக்க காக்க உன்னாயுதமே
காக்க காக்க உன் திருவடிகள்
காக்க காக்க உன் மூஸிகமே
சிரத்தை சிரத்தின் உட்பகுதியுனை
சித்த கணபதி சிறப்புடன் காக்க
சிரமேல் கேசம் அதன் பற்றையினை
தேசி விநாயகன் செவ்வி காக்க

கண்களிரண்டை கருணா மூர்த்தி
கரிமா முகனே காக்க காக்க
இமைகள் இரண்டை இடைவிடாது
லம்போதரனே காக்க காக்க
செவிகள் இரண்டை சாமரக் கர்ணண்
சீருடன் என்றும் காக்க காக்க
நெற்றிப் பகுதியை சிந்தூர வர்ணன்
நிறைவு குறையாது காக்க காக்க
நாசியை விகட சக்ர விநாயகன்
நன்றாய் நாளும் கக்க காக
பேசிடும் வாயினை பேதமில்லாமல்
பிளிரும் மோதகன் காக்க காக்க
கழுத்துப் பகுதை வாதபி கணபதி
கருத்துடன் கருதி காக்க காக்க
உழைக்கும் தோள்களை ஊர்த்துவ கணபதி
உறுதி குறையா வண்ணம் காக்க

வதனப் பகுதியை இதமாய் என்றும்
வாமன மூர்த்தி கணபதி காக்க
முதுகை முதுகுப் பகுதியை இசைவாய்
மூஸிக வாகனன் முனைந்து காக்க
கும்பிடக் குவியும் கைகள் இரண்டை
கோகர்ணராஜன் குறியாய் காக்க
அம்பிகை பிள்ளை ஆதி நாயகன்
அன்புடன் வயிற்றை காக்க காக்க
நாபிக் கமல் பகுதி தன்னை
நர்த்தன கண்பதி நயமுடன் காக்க
நால்வாய் நாயகன் வயிற்றுப் பகுதியை
நன்றாய் என்|றும் காக்க காக்க
தொடைகள் இரண்டை சுர கணநாதன்
சுகமுடன் விளங்க காக்க காக்க
தொடை கீழ்பகுதியை தொய்வு இல்லாமல்
சுந்தர கணபகுதி பெருமான் காக்க

கால்கள் இரண்டை கஜமுக நாதன்
கருத்துடன் கனிவாய் காக்க காக்க
கால்களின் கீழே பாத மிரண்டை
கந்தனின் சோதரன் காக்க காக்க
நகங்கள் தம்மை நலிவு படாமல்
நவசக்தி நாயகன் காக்க காக்க
அகத்தில் வாழும் உயிரை உயிரில்
அமர்ந்து உத்தண்ட கண்பதி காக்க
உடலை உச்சிட்ட கண்பதி காக்க
உதிரம் உச்சிப் பிள்ளையார் காக்க
படரும் நரம்பை பரவும் நாடியை
பார்வதி மைந்தன் காக்க காக்க
காலை மாலை வேளை தன்னில்
கற்பகக் களிறாம் பெருமான் காக்க
நடுநிசி சாமம் அந்தி விடியலில்
நாரணன் மருகன் துணையாய் காக்க
எல்லா நேரமும் தொல்லைகள் வராது
எக தந்தன் இழைவுடன் காக்க
பில்லி சூனியம் எதுவும் தொடாது
பிள்ளையார் அப்பன் பெரிதாய் காக்க

பகையும் சூதும் எதிரில் படாமல்
பானை வயிற்றோன் பக்கம் காக்க
நகமும் ஓடும் உருவமும் கொண்டு
நலிவுகள் எதுவும் வராது காக்க
பேய்களும் முனிகளும் பிசாசு எவையும்
பிரமராட்சதரும் கொடியவர் எவரும்
சேர்ந்தென்னை தொடரா வண்ணம்
என்றும் சிவனார் முதல் மகன் காக்க
நோய்கள் நொடிகள் வராத வண்ணம்
பூதண உருவ மேளன் காக்க
பிணிகள் எதுவும் பக்கம் வராமல்
பிரணவப் பொருளோன் புகழாய் காக்க
இன்றே வேண்டி து தி செய்கின்றோம்
எம்மை காப்பாய் சற்குரு நாதா
என்றும் உந்தன் நினைவை வைக்கும்
எளியேன் ஆசையை நிறைவேற்றிடுவாய்

குன்றில் குன்றாய் விரியும் குணமே
கோலாகலமே பக்தியின் மணமே
வென்றார் வெல்வார் அனைவரின் பின்னும்
வெற்றியின் விளைவாய் விரியும் வித்தே
காலன் அவனையும் நடுங்கிட செய்யும்
கால காலனே கணபதி நாதா
வேலனை வள்ளி விரும்பிட செய்த
செங்கதி உருவே விஜய கணபதி
காவிரி என்னும் மாநதி தன்னை
காசினி ஓடிட செய்த களிறே
பூவடி உயரம் கொண்டு உலகினை
முனைப்புடன் காக்கும் மோன நாதனே
பண்டாசுரனின் விக்ன சக்கரம்
பயனில்லாமல் செய்த பரமனே
அண்டாதெந்தத் துயரம் என்றே
அருளாய் நிற்கும் அன்பானந்தா
ஆற்றல் யாவும் தருவார் போற்றி
அறுகம் புல்லில் இருப்பாய் போற்றி
ஏற்றம் என்றும் தருவாய் போற்றி
இகபர சுகமென விரிவாய் போற்றி

பிரம்ம ரூபனே சரணம் சரணம்
பிரணவ வேழனே சரணம் சரணம்
பிரம்மச்சாரியே சரணம் சரணம்
பிராண நாதனே சரணம் சரணம்
கஜமுக நாதா கழலடி சரணம்
தேவ விநாயகா செவ்வடி சரணம்
மகா கணேச மலரடி சரணம்
ஜெயஜெய கணபதி ஜெயஜெய கணபதி
ஜெயஜெய கணபதி சரணம் சரணம்
சரணம் சரணம் கணபதி சிவ ஓம்
சரணம் சரணம் விநாயகா சரணம்

வெள்ளி, 27 நவம்பர், 2009

அபிராமி அந்தாதி

காப்பு


தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.


ஞானமும் கல்வியும் பெற
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே: 1

பிரிந்தவர் ஒன்று சேர
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. 2

குடும்பம் கவலையிலிருந்து விடுபெற
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3

உயர் பதவிகளை அடைய
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4

மனக்கவலை தீர
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. 5

மந்திர சத்தி பெற
சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. 6

மலையென் வருந்துன்பம் பணியென நீங்க
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே. 7

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே 8

அனைத்தும் வசமாக
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே. 9

மோட்ச சாதனம் பெற
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. 10

இல்வாக்கையில் இன்பம் பெற
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. 11

தியானத்தில் நிலை பெற
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே. 12

வைராக்கியம் நிலை எய்த
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே? 13

தலைமை பெற
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: 14

பெருஞ் செல்வமும் பேரின்பமும் பெற
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. 15

முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே. 16

கன்னிகைகளுக்கு நல்ல வரன் உண்டாக
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே? 17

மரண பயம் நீங்க
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே. 18

பேரின்ப நிலையடைய
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19

வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே. 20

அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்க
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே. 21

இனிப் பிறவா நெறி அடைய
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. 22

எப்போதும் மகிழ்சியாய் இருக்க
கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே. 23

நோய்கள் விலக
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே. 24

நினைத்த காரியம் நிலைபெற
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25

செல்வாக்கும் சொல்வாக்கும் பெருக
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே. 26

மன நோய் அகல
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே. 27

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. 28

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே. 29

அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே. 30

உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே. 31

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே. 32

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே 33

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே. 34

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. 35

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே. 36

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. 37

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே. 38

ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே. 39

 வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. 40


புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. 41

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. 42

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 43

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. 44

தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே. 45

 வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே. 46

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. 48

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. 49

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே. 50

அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. 51

வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே. 53

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே. 55

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. 56

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே? 57

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 58

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. 59

பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க--
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே? 60

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே. 61

தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. 62

தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. 63

வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. 64

ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே. 65

வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே. 66

தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே. 67

பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே. 68

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே, 69

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. 70


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே? 71

எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே. 72

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே. 73

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74

தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. 75

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே. 76

பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. 77

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே. 78

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே? 79

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே. 80

அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே. 81

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே? 82

விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே. 83

உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. 84

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே. 85

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. 86

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே. 87

பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே. 88

சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே. 89

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. 90

மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. 91

பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்--
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே. 92

நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 93

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே. 94

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. 95

கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. 96

ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே. 97

தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?--
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே. 98

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே 99

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! 100

நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.